Friday, September 4, 2009

தமிழ் விசைப்பலகைகள் பற்றிய எனது புரிதல்கள்

தமிழ் விசைப்பலகை முறைகளின் பயன்பாடு தொடர்பாக பல்வேறு வகையான வாக்குவாதங்களை வலைப்பதிவுகளினூடாக சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. எனது கருத்துக்களை அவர்களது வலைப்பதிவுகளில் பின்னூட்டமாக தனித்தனியாக இடுவதற்கு பதிலாக இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன். இதனைப் படிப்பவர்களின் கருத்துக்களை உள்வாங்குவதன் மூலம் இது தொடர்பான ஒரு சரியான புரிதலினை எனது மனசு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

தமிழ் விசைப்பலகை தொடர்பான தற்போதய எனது புரிதலை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.

1) தமிழ்99 விசைப்பலகை முறை

வேகமாக தட்டச்சிட உதவும் சிறந்த முறை. புதிதாக தமிழில் தட்டச்சிட பழகுபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட முறை. அனைத்துக் கல்வி நிறுவனங்களின் (பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்..) கணினி பாடவிதானங்களில் தமிழ் இளஞ்சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தட்டச்சு முறை. தமிழ்99 விசைப்பலகை முறை பற்றிய மேலதிக விளக்கங்களை http://www.tamil99.org இல் சென்று அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. பிற விசைப்பலகை முறைகளில் ஏற்கனவே தட்டச்சிடுபவர்களும் தமிழ்99 இனை பயிற்சிசெய்தபின் அதன் வேகத்தை தாங்களாகவே உணர முடியும்.


2) தமிழ் தட்டச்சு விசைப்பலகை/Bamini/ரெங்கநாதன் முறை

தமிழ் தட்டச்சியந்திரத்தில் ஏற்கனவே தட்டச்சிட பழகியவர்களுக்கான முறை. அநேகமாக அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உபயோகித்திருப்பார்கள். அவர்கள் தமிழ் தட்டச்சு இயந்திர விசைப்பலகை அமைப்புடன் கூடியளவு ஒத்திருக்கும் தமிழ் தட்டச்சு விசைப்பலகை முறையினை ஏற்கனவே பழகிய இலகுத்தன்மை கருதி உபயோகிக்கிறார்கள். மேலும் தமிழ்99 விசைப்பலகை தொடர்பான விழிப்புணர்வு இன்மையால், இன்றும் கூட புதிதாக தமிழில் தட்டச்சிட பழகுபவர்களும் இதனை வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறார்கள். அதாவது கணினியில் Tamil99 Keyboard driver நிறுவுவதைவிட Bamini font நிறுவுவது என்பது இலகுவானதான விடயமாக சிலர் கருதுவதால் இன்றும்கூட தமிழ் தட்டச்சு/Bamini முறைக்கு பழகிவிடுகிறார்கள். எனவே தமிழ்99 தொடர்பான விழிப்புணர்வையும் அது தொடர்பான தொழில்நுட்ப அறிவினையும் பரப்புவதன் மூலம் இந்த நிலமையை காலக்கிரமத்தில் மாற்ற முடியும். ஏற்கனவே பழகியவர்கள் இதனை உபயோகிக்கிறார்கள் என்பதற்காக தயவுசெய்து இளம் சமுதாயத்தினரையும் இதனை உபயோகிக்க ஊக்கப்படுத்தாதீர்கள். இத் தட்டச்சு விசைப்பலகை முறையினை விட தமிழ்99 விசைப்பலகை முறையின் மூலம் குறித்த நேரத்தில் அதிகமான சொற்களை தட்டச்சுச் செய்ய முடியும். நீண்டகால நோக்கில் வாழ்க்கையின் பெறுமதியான பல மணித்துளிகளை மிச்சப்படுத்தலாம்.

3) Phonetic முறை

தமிழ் பேசத்தெரிந்த ஆனால் தமிழ் எழுத்துக்களை மற்றும் தமிழ் இலக்கணங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கான விசைப்பலகை முறை. தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் கூட இதனை இலகுவான தட்டெழுத்து முறையாகக் கூறிக்கொண்டாலும் மற்றைய விசைப்பலகைகளுடன் ஒப்பிடும்போது வேகம் குறைந்த முறையிதுவாகும். இவ்விசைப்பலகை முறை ஆரம்பத்தில் இலகுவானதாகத்தான் தெரியும் ஆனால் நாளடைவில் இது உங்களது வாழ்வின் பெறுமதியான மணித்துளிகளை உங்களையறியாமலே விழுங்கிவிடும் ஆபத்தை தரவல்லது. அது மட்டுமல்ல தமிழ் சொற்களின் ஆங்கில phonetic வடிவங்களே நாளடைவில் நினைவில் நிலைநிறுத்தப்படும் ஆபத்தும் உள்ளது. இந்த Phonetic விசைப்பலகை முறையினை விட தமிழ்99 விசைப்பலகை முறையின் மூலம் குறித்த நேரத்தில் அதிகமான சொற்களை தட்டச்சுச் செய்ய முடியும்.

4) பிற முறைகள்

பிற விசைப்பலகை முறைகளில் ஏற்கனவே தட்டச்சிடுபவர்களும் தமிழ்99 இனை பயிற்சிசெய்தபின் அதன் வேகத்தை தாங்களாகவே உணர முடியும்.

13 comments:

  1. உங்கள் புரிதல்கள் பெரும்பாலும் எனது கருத்துக்களுக்கு இசைவாகவே உள்ளன. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அழுத்தப்படும் விசைகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்திற் கொண்டு பார்த்தால் பாமினியை விட தமிழ்நெற்99 முறை விரைவானதாகத் தோன்றும். ஆனால் ஒருங்குறி எழுத்துரு மாற்றத்துக்கு வெளியே நின்று யோசித்தால் பாமினிக்கு ஓர் அனுகூலமுண்டு என்று கருதுகிறேன்.

    தாளில் கையால் எழுதுவதைப் போன்றே பாமினி முறையில் தட்டச்சுகிறோம். 'கொம்பு' என்று தாளில் எழுதும்போது முதலில் ஒற்றைக்கொம்பை எழுதுவோம், பிறகு கானா, அதன்பிறகு அரவு(கால்), அதன்பின் மானா பிறகு அதன்மேல் ஒரு குற்று, கடைசியாக பூனா. இப்படி எழுதிப்பழகிய, அப்படியே மனதில் எழுத்துக்கூட்டிப் பழகிய எமக்கு தட்டச்சும்போதும் அதைப்போன்றே எழுத்துக்கூட்டிச் சிந்திப்பது இலகு. தட்டச்சுவதற்கென்று தனியாக ஓர் எழுத்துக்கூட்டும் சிந்தனை முறைக்குப் பழக்கப்படத் தேவையில்லை.

    பாமினியில் அச்சொட்டாக நாம் எழுதுவதைப் போன்றே தட்டச்சுகிறோம். 'கொம்பு' என்று தட்டச்ச வேண்டுமானால் முதலில் ஒற்றைக்கொம்பு, கானா, அரவு, மானா, குற்று, இறுதியாக பூனா.

    தமிழ்நெற்99 முறைக்கு தமிழின் அடிப்படையான ஒலிப்பிறப்பு முறையில் சிந்திக்க வேண்டும். 'கொ' என்றால் க+ஒ, 'பு' என்றால் ப+உ என்று சிந்திக்க வேண்டும். (அதுவும் மெய்யுக்குக் குற்றுப்போடாமல் எழுதவும் சிந்திக்கவும் தொடங்குவது எந்த விளைவைத் தருமென்பது இன்னொரு வாதமாக வரும். சிந்தனை முறையில் ஏற்படுத் தாக்கமே தமிழ் விசைப்பலகை முறைகள் பற்றி விவாதத்தில் முதன்மைக் கருப்பொருள். இந்நிலையில் தமிழ்நெற்99 உம் ஒருவகையில் பிரதிகூலத்தைக் கொண்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்போதைக்கு எனது நிலை, பாமினியா தமிழ்நெற்99 ஆ என்பதன்று. ஆங்கில ஒலியியலை எதிர்ப்பதே முதன்மைத் தேவை.)

    'பாமினியைப் பழக்காதீர்கள்' என்ற அறிவுரையை வலுப்படுத்த நியாயமான காரணங்கள் எவற்றையும் நான் இதுவரை காணவில்லை. வேகக்குறைவு என்பது முக்கியமான காரணமன்று. ஆங்கில ஒலியியலை எதிர்ப்பதற்கு நான் வேகக்குறைப்பை முக்கியமாக காரணியாகச் சொல்வதில்லை.

    -வசந்தன்.

    ReplyDelete
  3. நிமல், தங்களது கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. வசந்தன், முதலில் தங்களது கருத்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும் நன்றிகளும். உங்களது கருத்துக்கள் எனது சிந்தனை கிளறி விட்டிருந்தது. இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு வழி சமைக்குமென நம்புகிறேன்.

    தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களிடையே ஆங்கில Phonetic முறையின் பாவனையை தவிர்க்க வேண்டும் என்பதில் நாமிருவருமே உடன்படுகிறோம். எனவே பாமினி மற்றும் தமிழ்99 தொடர்பான ஒப்பீடுகளை மட்டும் இந்த இடுகையில் விவாதிப்பது பொருத்தமாகும்.

    அழுத்தப்படும் விசைகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்திற் கொண்டு பார்த்தால் பாமினியை விட தமிழ்99 முறை விரைவானதாகத் தோன்றும் என்பதிலும் நீங்கள் உடன்படுகின்றீர்கள். ஆனால் தமிழ்99 தொடர்பாக உங்களைச் சிந்திக்க வைத்த விடயங்களென பின்வருவனவற்றை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.
    1) தமிழின் அடிப்படையான ஒலிப்பிறப்பு முறையில் சிந்திக்க வேண்டும்.
    2) மெய்யுக்குக் குற்றுப்போடாமல் எழுதவும் சிந்திக்கவும் தொடங்குவது எந்த விளைவைத் தரும் என்ற ஐயம்.

    புதிதாக ஒருவர் தமிழ் விசைப்பலகையை பழகும்போது அவரது அனுபவத்தை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்.
    1) பயிற்சியின் போதுள்ள அவரது நிலை
    2) பயிற்சியின் பின்னரான அவரது நிலை

    எங்களது இலக்கு பயிற்சியின் பின்னரான நிலையானது இலகுவானதாக/வேகமானதாக இருக்க வேண்டும் என்பதே. ஏனெனில் உதாரணமாக ஒரு மாதத்தில் முழுமையாக பயிற்சி பெற்ற ஒருவர் வாழ்நாள் முழுவதும் அதனையே உபயோகிக்க போகிறார். எனவே தூர நோக்கில் பார்த்தால் பயிற்சிக்கு பின்னரான காலத்தில் அவர் பெற்ற பயிற்சியானது அவரது தேவையை இலகுவானதாக/வேகமானதாக வாழ்நாள் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும்.

    ஆனாலும் இரண்டு நிலைகளுமே இலகுவானதாக/வேகமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்த்தான் தமிழ் விசைப்பலகை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து செல்லவேண்டியது அவசியமானது. அப்படியொரு விசைப்பலகை முறை கண்டுபிடிக்க முடியாதவிடத்துத்தான் இரண்டாவது நிலையானது இலகுவானதாக/ வேகமானதாக இருக்கத்தக்கவாறு ஒரு முறைபற்றி நாம் நோக்க வேண்டும். அதனால்த்தான் எங்களது இலக்கு என்பதை பயிற்சியின் பின்னரான நிலையானது இலகுவானதாக/வேகமானதாக இருக்க வேண்டும் என்று மேலே பொதுவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

    (தொடரும்...)

    ReplyDelete
  5. (தொடர்ச்சி...)
    இதன் அடிப்படையில் பாமினியையும் தமிழ்99 இனையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இதுபற்றிய கலந்துரையாடலை விரிவு படுத்த முடியும்.

    புதிதாக ஒருவர் தமிழ் விசைப்பலகையை பயிற்சி செய்யும்போது அவர் எழுத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதனையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதே நேரம் எழுத்துகளை உருவாக்குவதற்கு எந்தச் சாவிகளை தனியாகவோ அல்லது கூட்டாகவோ அழுத்த வேண்டும் என்பதனையும் தெரிந்துகொள்ள வேண்டும்(அதாவது தாளில் எழுதுவது போலவா அல்லது ஒலிபிறப்பு முறை மூலமாகவா...). எனவே இலகுத்தன்மை/வேகம் என்பது இந்த இரண்டு முக்கிய விடயங்களையும் அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும். நான் வேகம் என்ற சொல் மூலம் பதிவில் ஒப்பிட்டது இதனை அடிப்படையாக வைத்துத்தான்.

    தமிழ்99 எழுத்துக்கள் விசைப்பலகையில் எங்கெங்கு இருக்கின்றன என்பதனை இலகுவாக மனத்தில் பதிய வைத்துவிடலாம். ஆனால் பாமினியில் எழுத்துக்களை மனத்தில் பதிய வைப்பதற்கு கூடிய பயிற்சி தேவை.

    தமிழ்99 மூலம் எழுத்துக்களை உருவாக்குவதற்கு ஒலிப்பிறப்பு முறையில் சிந்திக்கவேண்டும் என்பதால் சிந்தனை மாற்றம் இலகுவான விடயமாக இருக்குமா என்ற உங்களது வினாவை இலகுவாக ஒதுக்கித்தள்ள முடியாது.

    எனவே இது பற்றிய செயல்முறையோடான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு எந்த முறையானது பயிற்சியின் போதுள்ள காலப்பகுதியில் இலகுவானதென கண்டறியப்படவேண்டும். ஆராய்ச்சி முடிவுகள் தமிழ்99 இற்கு சார்பானதாக வரமாட்டாது என்றும் இப்போதைக்கு எதுவும் அறுதியிட்டு கூறமுடியாது.

    இந்த ஆராய்ச்சி முடிவு எவ்வாறாக வந்தாலும், தமிழ்99 இன் முழுமையான பயிற்சியின் பின்னரான நிலையில் ஒலிப்பிறப்பு முறையில் சிந்திப்பதால் அது தட்டச்சிடும் வேகத்தை குறைக்கும் என்றும் இலகுவாகக் கூறிவிடமுடியாது. எந்த விடயமும் பழக்கத்திற்கு வந்த பின்பு அதுவே இயல்பான விடயமாகிவிடும். அன்றாட வாழ்வில் எல்லோருமே இதனை உணர்ந்திருப்போம்.

    எனவே முழுமையான பயிற்சியின் பின்பு, ஒலிப்பிறப்பு முறையில் சிந்திப்பதால் வேகம் குறையும் என்ற எங்களது கருதுகோள், செயலிழக்கும் என எடுத்துக்கொள்ள முடியும். எனவே பயிற்சியின் பின்னரான காலத்தில் தமிழ்99 முறையானது தமிழ் தட்டச்சு/பாமினி/ரெங்கநாதன் முறையினை விட வேகம் கூடியது எனக் கூற முடியும்.

    இனி மெய்யுக்குக் குற்றுப்போடாமல் எழுதவும் சிந்திக்கவும் தொடங்குவது எந்த விளைவைத் தரும் என்பது பற்றி கவனிப்போம். உங்களைப் போன்றே எனக்கும் இந்த வினா மனத்தில் இருந்து வந்தது. நான் மற்றவர்களுக்கு தமிழ்99 கற்றுக்கொடுக்கும் போது மறக்காமல் கற்றுக்கொள்பவர்களிடம் இந்த வித்தியாசத்தைக் குறிப்பிடுவதுண்டு. தமிழ் மெய்யெழுத்துக்களான க், ச், ..... என்பன தமிழ்99 இன் சாவிகளில் அகரம் சேர்ந்துதான் காணப்படுகின்றன. அதனால் குழப்பமடைய வேண்டாம் என்று மறக்காமல் கூறுவதுண்டு. இதனால் நீண்ட கால நோக்கில் ஏதாவது தீமைகள் தமிழ் மொழிக்கு ஏற்படுமா என்பது தமிழ்மொழி வல்லுனர்களோடும் இணைந்து ஆராயப்படவேண்டிய விடயம் என்பதால் இது பற்றி அதிகம் கதைப்பதை தற்போதைக்கு தவிர்த்துக்கொள்கிறேன்.

    தயவுசெய்து எனது இந்தக் கருத்துக்களையும் செவ்வைப்படுத்தவும். நன்றி.

    ReplyDelete
  6. மணி,
    முதலில் உங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

    ஏன் பாராட்டென்றால், நான் எழுதியதைச் சரிவர அப்படியே விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அண்மைக்காலத்தில் நானெழுதியவை அனைவராலும் சரிவர விளங்கிக் கொள்ளப்படவில்லை ;-(.

    உங்கள் விளங்கங்களுக்கு நன்றி. இவை தொடர்பாக இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கப் போவதில்லை, அதனால் ஏதும் பயனிருப்பதாகவும் நினைக்கவில்லை.
    நான் முன்பே குறிப்பிட்டதுபோல் பாமினியா தமிழ்நெற்99 ஆ என்ற தர்க்கத்துக்கு நான் நுழையப் போவதில்லை. பாமினியை நாம் இன்னமும் விடாமற் பிடித்துக்கொண்டிருப்பதற்கு தனிப்பட்ட பிடிவாதம், அரசியல் என்பனவும் காரணமே. பாமினியை விட்டு வெளியே வாருங்கள் என்ற தொனிப்பட பரப்புரை நடைபெறும்போது - அதுவும் நியாயமான காரணங்களை முன்வைக்காமல் அது நடக்கும்போது எதிர்த்தெழுதத் தோன்றும்; அவ்வளவே.

    உங்களுக்கென்றோர் அரசு(?) உண்டு. எக்காரணந்தான் பின்னணியாகவிருந்தாலும் அது அங்கீகரித்த முறையைப் பின்பற்றுவது உங்கள் விருப்பமே. நாங்கள் எதைச் செய்ய வேண்டுமென்று மகிந்தவிடம் தான் கேட்க வேண்டும் ;-).

    ======================
    கூகிள் ஆங்கில ஒலியியல் முறையில் ஒருங்குறி எழுத்துருமாற்றி வசதியை வெளியிட்டபோது ஓர் அரசு என்ற முறையில் தமிழ்நாட்டரசு தம்மால் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்நெற்99 முறையை அதில் இடம்பெறச் செய்திருக்க முடியுமல்லவா? (கூகிள் அரசுகளுக்கு அடிபணிவதில்லை என்று யாரும் சொல்லிக் கொண்டு வராதீர்கள்.) அப்படியெதுவும் செய்யாது, கண்முன்னே ஆங்கில ஒலியியல் சகல வழிகளிலும் பல்கிப் பெருகுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு பாமினியா தமிழ்நெற்றா என்று வாதிடுவது வேடிக்கையானது. இதிலே நீங்கள் சொல்வதைப் போல் ஆராய்ச்சியும் விவாதமும் செய்து முடிவு தெரியும்போது இது தொடர்பாக வாதிட்டுக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே பாமினியோ தமிழ்நெற்99 ஓ தட்டச்சிக் கொண்டிருப்போம்.

    ReplyDelete
  7. வசந்தன், உங்களது கருத்துகளுக்கு நன்றிகள்.

    நானும் உங்களது தமிழ் தட்டச்சு/பாமினி/ரெங்கனாதன் விசைப்பலகை முறையா அல்லது தமிழ்99 விசைப்பலகை முறையா சிறந்தது என்ற விவாதத்தைவிட ஆங்கில phonetic விசைப்பலகை முறையின் தவிர்த்தலையே முதன்மையான விடயமாகக் கருதுகின்றேன். மேலும் ஆங்கில phonetic விசைப்பலகை முறையானது தமிழ் எழுதப் படிக்கத்தெரிந்தவர்களினைப் பொறுத்தவரையில் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியது என்பது வெளிப்படையானது. கிட்டத்தட்ட புகைபிடிக்கப் பழகுவதுபோன்ற ஒரு விடயமே இதுவாகும். ஆரம்பத்தில் இலகுவானதாக தோற்றமளித்தாலும் அந்தப் பழக்கத்தினால் வரும் பக்கவிளைவுகள் ஏராளம். அத்தோடு பழக்கத்தை மாற்றுவதுகூட கடினமானதாகிவிடும்.

    நான் தமிழ் தட்டச்சியந்திரத்தில் தட்டச்சிட பழகிய அனுபவம் காரணமாக தொடர்ந்தும் பாமினியிலேயே தட்டச்சிட்டு வருகின்றேன் என்பதே உண்மையான விடயம். பாமினி எனது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்கின்றது. வேறொரு விசைப்பலகை முறைக்கு மாறவேண்டிய அவசியம் தற்போது எனக்கில்லை. ஆனாலும் அறிவு பூர்வமாக தமிழ்99 தொடர்பாக ஆராய்ந்து பார்த்ததில் அவற்றில் சில நல்ல விடயங்கள் தமிழ்தட்டச்சு முறையை விட அதிகமாக இருப்பதாகத் தோன்றுவதால்த்தான் தமிழ்99 தேவைபற்றி இப்பதிவில் அலசியிருந்தேன். இது எனது சிற்றறிவுக்கு பட்ட விடயம். இது சிலவேளைகளில் பிழையாக இருக்குமோ என்ற ஐயமே ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை உருவாக்குவதற்காக இந்தப் பதிவைப் போட வைத்தது. வேறெந்த காரணங்களும் அல்ல.

    தமிழ்99 விசைப்பலகை முறைபற்றி ஒரளவு அறிந்துகொண்டபோதும் இதுவரை நான் தமிழ்99 விசைப்பலகை முறையை பயிற்சி செய்வதற்கு முயன்றது கூட இல்லை. அது என் தனிப்பட்ட சோம்பேறித்தனம். அதனால்த்தான் தமிழ் விசைப்பலகை முறையை பழக நினைக்கும் புதியவர்களை தமிழ்99 பழகும்படி அறிவுறுத்துகிறேன். பாமினி பழகியவர்கள் பின்பு தமிழ்99 இற்கு மாறுவதற்கு பழக்கம் ஒரு தடையாக இருக்கக்கூடாதென்பதற்காகத்தான் அவ்வாறு சொல்லியிருந்தேன்.
    (தொடரும்...)

    ReplyDelete
  8. (தொடர்ச்சி...)
    தற்போது தமிழில் தட்டச்சிடுபவர்களையும் எதிர்காலத்தில் தமிழில் தட்டச்சிடப் போகின்றவர்களையும் வேறு வேறான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்பதன் அடிப்படையிலே எனது கருத்துக்கள் அமைந்திருந்தன. தற்போது தமிழில் தட்டச்சிடத் தெரிந்தவர்கள் இலகுவில் வேறொரு விசைப்பலகை முறைக்கு மாற மாட்டார்கள் என்பதும் தங்களது முறை தான் சிறந்தது என்ற ரீதியிலும்தான் வாதிடுவார்கள் என்பதும் மனித மனசின் இயல்புகளை உற்றுப்பார்ப்பவர்களுக்குப் புரியும். இவ்வியல்பு பிழையென்றும் கூட சிலவேளைகளில் கூற முடியாதுதான்.

    தமிழில் பாமினியில் தட்டச்சிடும்போது, இதனை விட வேகமாக தமிழில் தட்டச்சிட முடியாதா என்ற எனக்குள் எழுந்த தேடலினால்த்தான் தமிழ்99 விசைப்பலகை முறைபற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் என்னுள் இருக்கும் சோம்பல் இன்னமும் தமிழ்99 இனை பயிற்சிசெய்ய 10 நிமிட நேரத்தினைக்கூட ஒதுக்க விடவில்லை. ஆனாலும் பயிற்சி இல்லாமலே விசைப்பலகையின் அமைப்பைப் பார்த்த படி ஒரளவு வேகமாக தட்டச்சிட முடிகிறது. அத்தோடு, இது நான் தமிழ் தட்டச்சியந்திரத்தில் பழகிய ஆரம்ப நாட்களில் இருந்ததை விட வேகமாக உள்ளது என்பதை மட்டும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. { தமிழ்99 விசைப்பலகை முறையினை பயிற்சி செய்த பின்பு அதனைப்பற்றி விரிவாக ஒரு பதிவு போட வேண்டும. :) }

    இந்தப் பதிவின் நோக்கம் ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு சிறந்த விசைப்பலகை முறை ஒன்றினை கண்டுணர்வதே ஆகும். எனது கருத்துச் சரியென்று நான் வாதிடுவதைவிட பின்னூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் கருத்துகளின் மூலம் எனது மனசின் புரிதல்களை தெளிவடைய வைப்பதையே முக்கியமாகக் கொள்கின்றேன்.

    வசந்தன் உங்களது கருத்துக்களுக்கும் உங்களது பொன்னான நேரத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  9. மணி,

    உங்கள் முதல் இடுகையே தமிழ்99 குறித்து இருப்பது கண்டு மகிழ்ச்சி.

    //இனி மெய்யுக்குக் குற்றுப்போடாமல் எழுதவும் சிந்திக்கவும் தொடங்குவது எந்த விளைவைத் தரும் என்பது பற்றி கவனிப்போம். //

    இது தவறான முன்முடிவு. தமிழ்99 முறையில் நான்கு ஆண்டுகள் எழுதி வந்த போதும், அது ஒரு போதும் தமிழ் எழுத்து முறை பற்றிய சிந்தனை, தாளில் எழுதுவதில் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை.

    ReplyDelete
  10. தமிழை எழுதுவதற்கு பல வழிகள், பலபல மிகமிகக் குளப்பமான வழிகள், அவரவர் அன்று கண்ட அல்லது அறிந்த தொழில்நுட்பத்தின் படி ஆக்கப்பட்ட வழிகள்

    ஒரு புதிய, மிக மிக இலகுவான, யாராலும் உடனடியாக உபயோகிக்க கூடிய, தமிழர் கோட்பாடுகளின் படி (சக்தி + சிவம் = இயக்கம் < => மெய் +உயிர் = உயிர் மெய்) இயங்கும் ஒரு எலி-எழுத்தாணி,

    கிளிகெழுதி : http://kilikeluthi.online.fr

    தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுதலாம். வலையில் நேரடியாக அல்லது உங்கள் யு.எஸ்.பி யில் பதிவு செய்து இதை இயககலாம்...
    இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது, இவற்றை உங்கள் கணிஜந்திரத்தில் இயக்குவதற் தேவையான அடிப்படை உபகரணங்கள் seamonkey அல்லது firefox என அழைக்கப்படும் வலையோடியும் utf-8 தமிழ் எழுத்துக்களும் ஆகும்


    demo : http://kilikeluthi.online.fr/edeluthi/

    ReplyDelete
  11. பகுதி 1
    நான் கடந்த காலங்களில் தமிழ் தட்டச்சு முறைகளைப் பற்றி அதிகமாக சிந்தித்து வந்திருக்கிறேன். ஆனால் இன்றுதான் கலந்துரையாடுவதற்கு ஒரு பொருத்தமான வலைப்பூவைக் கண்டேன்.

    என்னைப் பற்றி ஓர் அறிமுகம்.
    நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். 1980 முதல் டைப்ரைட்டரில் பல ஆவணங்களைத் டைப் செய்து கொடுத்திருக்கிறேன். கணினியின் யுகத்திற்குப் பிறகு அதே விலைப் பலகை முறையைப் பயன்படுத்தி வருகிறேன். என்னால் விசைப் பலகையையும் திறையையும் காணாமல் மூல ஆவணத்தை மட்டும் பார்த்த நிலையில் டைப் செய்ய முடியும். வாசகர்கள் டைப் செய்வதற்கு எத்தனை விரல்களைப் பயன்படுத்துவார்கள் என்பதை அறியேன். ஆனால், நான் டைப் செய்வதற்கு 9 விரல்களைப் பயன்படுத்துவேன். இடது கட்டை விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களும் அதற்குரிய எழுத்துகளைத் தட்டும். இடது கட்டை விரல் ‘சென்ஸர்’ போன்று மாத்திரமே செயல்படும்.

    அந்த வாலிப காலத்தில் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டதால் இந்தப் பேறு எனக்குக் கிடைத்தது.

    ஒவ்வொரு விசைப் பலகை முறையைப் பற்றியும் இங்குப் பலர் பலவிதமான கருத்துகளைப் பதித்துள்ளனர். நானும் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆரம்பமாக ஒவ்வொரு விசைப் பலகையிலும் உள்ள பலவீனத்தைப் பார்ப்போம்.

    விசைப் பலகை என்றால் ஒரு சீர்மை இருக்க வேண்டும். ஆங்கில விசைப் பலகை அமைப்பு முறையைக் கொண்டு இந்த சீர்மையை விளக்க விரும்புகிறேன்.

    உங்கள் விசைப் பலகையைக் கூர்ந்து கவனித்தால் F, J ஆகிய இரண்டு கட்டைகளிலும் சற்று மேடான பகுதி இருக்கும். இந்த இரண்டு கட்டைகளிலும் நமது ஆள்காட்டி விரலை வைக்க வேண்டும். மற்ற விரல்களை வரிசையாக அடுத்தடுத்த கட்டைகளில் அடுக்கிக் கொண்டு, ஒரு 4 மணி நேரப் பயிற்சி எடுத்தால் எந்த மொழியிலும் (அந்தந்த மொழி தெரிந்திருக்கும் பட்சத்தில்) எந்த விசைப் பலகை முறைமைய மனனமாகக் கற்றுக் கொள்ளலாம்.

    மிகவும் வேதனையான காரியம் என்னவென்றால், கணினியின் வருகைக்குப் பிறகு இந்தத் தட்டச்சுப் பயிற்சி வகுப்புகள் எல்லா நாடுகளிலும் செயல்படாமல் போயிற்று.


    தமிழ் தட்டச்சு (டைப்ரைட்டர்) முறைமை
    ‘ண’ என்ற எழுத்து சரியானபடி Q என்ற கட்டையில் இருக்க வேண்டும். ஆனால், அது Z என்ற கட்டையில் அமைந்து விட்டது. என்னுடைய வாதத்திற்குக் காரணம் என்னவென்றால், Z வரிசை எழுத்து தமிழ் உயிர் எழுத்துகளின் வரிசையாகும். இந்த இடத்தில் கொண்டு பொய் ‘ண’ என்ற எழுத்தை வைத்திருப்பது துரதிர்ஷ்டம்தான்.‘ண‘ என்ற எழுத்தை Q என்ற எழுத்துக்கு மாற்றியிருந்தால் Z கட்டையில் ‘இ‘ என்ற எழுத்தை வைத்திருக்கலாம். இப்படி மாற்றத்தைச் செய்திருந்தால் ஆங்கில விசைப் பலகை போலவே தமிழ் டைப் செய்யும் போது முற்றுப் புள்ளியையும் காற்புள்ளியையும் டைப் செய்திருக்கலாம். இப்போது பிரச்சனை என்னவென்றால், இந்த இரண்டு நிறுத்தக் குறிகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் டைப் செய்யும் போது, வலது சிறு விரலுக்குத் தடுமாற்றம் ஏற்படும்.

    பாமுனி விசைப் பலகை முறைமை
    இதில் ஒரு மிகப் பெரிய கோளாறு என்னவென்றால், அடிக்கடி பயன்படுத்தப் படுகிற இரட்டைக் கொம்பு மேல் தட்டில் (Shift) வைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு துரதிஷ்டமான காரியமாகும். சரியானபடி தமிழ் டைப்ரைட்டர் விசைப்பலகை முறைப்படியே இந்த இரண்டு எழுத்துகளையும் அடுக்கியிருக்க வேண்டும். அதாவது, B - ஒற்றைக் கொம்பு, N - இரட்டைக் கொம்பு.

    ReplyDelete
  12. பகுதி 2
    தமிழ் நெட் 99
    இது இலக்கண ரீதியாக சரியாக அமைந்திருக்கிறது. மேலும், Shift விசையைப் பயன்படுத்தாமலேயே எல்லா தமிழ் எழுத்துகளையும் டைப் செய்து விடலாம். வரிசைப் படுத்துதலில் 2 சீர்மைக்கேடுகள் காணப்படுகின்றன. 1) உயிர் நெடில் எழுத்துகள் உயிர் குறில் எழுத்துகளின் மேல் அடுக்கப் பட்ட நிலையில், ‘ஒ’, ‘ஓ’ ஆகிய இரண்டு எழுத்துகளுக்கு இடம் இல்லாமையினால் கீழ் வரிசையில் இடம் வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு என்ன வழி என்ற கேள்வி எழக் கூடும். இதற்கு என்னுடைய ஆலோசனை இதுதான்....

    Z, x, C, V, B, N, M - இந்த விசைகளில் எல்லா உயிர் எழுத்துகளையும் அடுக்கி இருக்க வேண்டும். இந்த ஆங்கில எழுத்துகள் மொத்தம் 7. தமிழ் உயிர் எழுத்துகளும் மொத்தம் ஏழு(நெடிலைக் கணக்கிடவில்லை). இதன் அடிப்படையில் தமிழ் டைப்ரைட்டர் பாணியிலேயே உயிர் எழுத்துகளை அடுக்கியிருக்கலாம். பின்வரும் வரிசையைக் காணுங்கள்....

    இ - z
    ஒ - x
    உ - c
    எ - v
    அ - m
    ஐ - n
    ஔ -b

    இப்போது நீங்கள் கேட்கப் போகும் கேள்வி எனக்குப் புரிகிறது. தமிழ் நெடில் எழுத்துகளை எங்கே அடுக்குவது?
    அதற்கு என்னுடைய பதில் இதுதான்.

    ஈ - Z
    ஓ - X
    ஊ - C
    ஏ - V
    ஆ - M
    ஐ - n (ஏதாவது ஒரு வடமொழி எழுத்து)
    ஔ -b (ஏதாவது ஒரு வடமொழி எழுத்து)


    ஆங்கில எழுத்தை அடித்தல் தமிழ் எழுத்து தோன்றுதல்
    இது மிகப் பிரபலமாகி வரும் விசைப் பலகை. புதியவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதும் எளிது. அவர்கள் கற்றுக் கொள்வதும் எளிது. ஆனால், இதில்தான் மிகப் பெரிய அபாயமும் இருக்கிறது. இந்த விசைப் பலகை எளிய தமிழ் உள்ளீட்டு வேலைகளுக்குதான் பயன்படுகிறது. நான் பார்த்தவரை, பத்திரிகைத் துறை போன்ற கனமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்துகிறவர்கள் யாரும் இதைப் பயன்படுத்துவதில்லை. இதற்குக் காரணம், இந்த முறையைப் பயன்படுத்துகிறவர்கள் கண் - விரல் ஆகியவற்றைச் சேர்ந்து தங்கள் மூளையையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தையும் தட்டும்போது, இந்த எழுத்துக்கு ஈடான ஆங்கிய எழுத்து என்ன என்று மூளை யோசிக்கிறது. எனவே, பயனர்கள் வெகு விரைவாக அயர்வடைவார்கள். இது ஆக்கத் திறனுக்குப் பாதகமாக அமைகிறது.

    உண்மையான தீர்வு என்ன?
    என்னதான் அறிவியலாளர்கள் கூடி மாநாடு நடத்தினாலும், இந்த விசைப் பலகை முறைமை சர்ச்சையில் இருந்து விடுபடாது. அது விடுபட வேண்டும் என்றால் ஒரே ஒரு முறைதான் இருக்கிறது. மென்பொருள் மூலமாக மட்டும் இதைத் தீர்க்க முடியாது. வன்பொருள் மூலமாகவும் இதைத் தீர்க்க வேண்டும். அதாவது, விசைப்பலகையில் தமிழ் எழுத்துகளின் ‘வசிப்பிடத்தை’ Finalize செய்த பிறகு, விசைப்பலகையில் ஆங்கில எழுத்துகள் பதிக்கப் படுவது போல் தமிழ் எழுத்துகளையும் பதிக்க வேண்டும். ஜப்பானியர்கள் கொரியர்கள் அரபியர்கள் எல்லாம் தங்கள் மொழிக்குகென்று பிரத்தியேகமாக விசைப்பலகை தயாரித்திருக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் மட்டும் ஏன் இதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை.

    என் பதிப்பைப் படித்த பிறகாவது இந்த முயற்சியில் ஈடுபடுவார்களா?

    ReplyDelete